பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், ‘எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இதற்காக இன்றைக்கு எய்ம்ஸ் நடக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
மாணவர்களுக்கான வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எய்ம்ஸ் மாணவர்கள் 150 பேர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்து இருந்தது. வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது? இதோ மதுரை வேளாண் பல்கலைக்கழகம் என்னுடைய கையில் இருக்கிறது.
மதுரை வேளாண் பல்கலைக்கழகம் செங்கல்லாக இருக்கிறது. நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்கள். செய்பவர்களையும் விட மாட்டீர்கள். கொடுக்கணும், என நினைத்தாலும் நீங்கள் பாராட்ட மாட்டீர்கள்’ என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை’ என்று தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கல் ஒன்றை காட்டி, அ.தி.மு.க-வினரை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதே பாணியில்தான் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒற்றை செங்கல்லை தொண்டர்கள் மத்தியில் தூக்கி காட்டி தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார். இது, பா.ஜ.க-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.