'நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும்?' - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொல்வது என்ன?

'’அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது’’
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

'நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறுதானிய உணவுகளை உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தமிழக முதல்வர் முன்னோடியாக என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பு 3,42,999 ஹெக்டேர் ஆகும். மொத்த சாகுபடி பரப்பான 2,48,421 ஹெக்டேரில், 1,00,545 ஹெக்டேர் நீர்ப்பாசன பயிராகவும், 1,47,876 ஹெக்டேரில் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் கேழ்வரகை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக பயிரிடுவதால் மத்திய அரசினால் தர்மபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் இரண்டு கிலோ ராகி வழங்குவதாக தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.

அதனை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ராகி பயிரிடும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4,67,505 குடும்ப அட்டைதாரர்களில் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் ஆகிய 2,96,872 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் மாதம் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இத்திட்டம் துவக்கி வைக்கபட்டது. அதனையடுத்து இன்று தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச 2 கிலோ கேழ்வரகு வழங்கும் நிகழ்சியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், ''தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டைதாரர்கள் 20 கிலோ அரசியை இலவசமாக நியாய விலை கடைகளில் பெற்று வந்தநிலையில் இன்று முதல் 18 கிலோ அரிசியுடன் 2 கிலோ கேழ்வரகை பெற்றுகொள்ளலாம். அரிசி உணவுகள் சுவையாக இருப்பதால் அதிகம் பேர் அரிசி உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது. அதனால், ஆபத்துள்ள உணவை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை தரும் சிறுதானிய உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும்.

தமிழக முதல்வர் தமிழக மக்கள் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறுதானிய உணவுகளை உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு முன்னோடியாக தர்மபுரி மாவட்டத்திற்கு நியாய விலை கடையில் குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கியதற்கு முதல்வருக்கு நமது நன்றியை நாம் தெரிவிக்க வேண்டும்’’ என அவர் பேசினார்.

-பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com