நெல்லை அருகே அருந்ததியர் சமுதாய இளைஞர் சரமாரியாகக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாரின பெண்ணைக் காதலித்ததாலேயே அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி அருந்ததிய இன மக்கள். ஆனால், இது ஆணவக் கொலை அல்ல, இதே இனத்தைச் சேர்ந்த பெண்ணை கிண்டல், கேலி செய்ததாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது போலீஸ்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை பக்கம் அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திசையன்விளை பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முத்தையா 19 வயது. 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, விஜநாறாயணத்தில் செயல் பட்டு வரும் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு ஏழு மணிக்கு வீட்டை விட்டு பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள் காட்டுக்குள் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் எட்டு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆதி திராவிடர், திராவிட தமிழர் விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இயக்கங்கள் ஒன்று திரண்டு, இது ஒரு ஆணவக் கொலை. இதற்கு நீதி வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து இறந்து போன முத்தையாவின் தந்தை கன்னியப்பனிடம் பேசினோம்.‘‘எம் பையன் காதல் பிரச்சினையால்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறான். கூட வேலை செய்யும் இட்டமொழி பிள்ளையை லவ் பண்ணினான். இருவரும் பைக்கில் ஒன்றாகச் சுற்றுவார்கள். அவள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவள். எனவே மாலையில் அந்தப் பெண்ணை பைக்கில் வீட்டுக்குக் கொண்டு போய் விடும் சமயத்தில் பெண்ணின் அக்காள் கணவர் பெருமாள் பல தடவை இவனை அடித்து விரட்டியிருக்கிறார்.
தற்போது அந்தப் பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். அவளோ வேறு யாருடம் கல்யாணம் வேண்டாம், முத்தையாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லியிருக்கா. 22ம் தேதி அந்தப் பெண் என் வீட்டுக்கு வந்தாள். ‘எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க. வேறு யாருடனும் நான் வாழ மாட்டேன்’னு சொன்னா. நான்தான், ‘அம்மா உனக்கு வயசு 18. என் பையனுக்கு வயசு 19. இது கல்யாணம் பண்ற வயசில்லேன்னு சொன்னேன். என் பையனை கூப்பிட்டு, அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா என்றேன்.
அதன்படி அவனும் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டான். மறுநாள் மாலையில் அவனுக்கு ஒரு போன் வந்தது. உடனே புறப்பட்டு போனான். திரும்பி வரவே இல்லை. அவனைத் தேடியபோதுதான் முள் காட்டுக்குள் பிணமாய் கிடந்தான். இது ஒரு ஆணவக் கொலை. கொலைக்கு காரணம் ‘ஒரு சக்கிலியன் நாடாரின பெண்ணை காதலிப்பதா? என்பதுதான். அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் பெருமாள் மீதுதான் எங்களுக்கு சந்தேகம். ஏற்கெனவே ஒரு வாரத்திற்கு முன்பு என் பையன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அடியாட்களுடன் வந்த பெருமாள் என் பையனிடம் தகராறு செய்திருக்கிறார்.
அப்போது உன்னை தீர்த்துக் கட்டாமல் விடமாட்டேன்னு சவால் விட்டு விட்டுத்தான் போயிருக்கிறார். இதையெல்லாம் திசையன்விளை போலீசில் போய் சொன்னோம். ஆனால், அவர்கள் வழக்கை திசைதிருப்பி விட்டார்கள்’என்றார்.
இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துப் போராடி வரும் திராவிடர் தமிழர் இயக்க மாநில அமைப்புச் செயலாளர் சு.க சங்கரிடம் பேசினோம். ‘இது நிச்சயம் ஆணவக் கொலைதான். நாடாரினப் பெண்ணை அருந்ததியர் இனப்பையன் காதலிப்பதா? என்பதுதான் மோட்டிவ். திசையன்விளை போலீஸ் முதலில் எஸ்.சி எஸ்.டி ஆக்டில்தான் வழக்குப் பதிவு செய்தது. முத்தையாவின் அப்பா கன்னியப்பனிடம் ‘மூன்று லட்சம் ரூபாய் வாங்கித் தருகிறோம். பிரச்சினை பண்ணாதீங்க’என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் லோக்கல் ஆளும் கட்சியினரின் பிரஷ்ஷரால் வழக்கை திசைதிருப்பி விட்டனர். முத்தையாவின் சித்தப்பா மகன் கார்த்திக்கிடம் போலியாக எழுதி வாங்கி வழக்கை ‘பெண்ணை கேலி செய்ததால் கொலை’என்று கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள்.
எனவேதான் நிதி கேட்டு கலெக்டர், எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டோம். எங்கள் மீதே வழக்கு போடுகிறார்கள். இன்று வரை முத்தையா காதலித்த பெண்ணை விசாரிக்கவில்லை. இதுபோன்ற ஆணவக் கொலையைத் தொடர்ந்து அப்பெண்ணும் கொல்லப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அவளை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்’’என்றார். ஆனால், இது ஆணவக் கொலை அல்ல என்று திட்டவட்டமாக மறுக்கிறது போலீஸ். இது குறித்து எஸ்.பி சிலம்பரசனிடம் பேச முயன்றோம், அவரது அறிக்கையை பிரசுரியுங்கள் என்று சொல்லி அறிக்கை நகலைக் கொடுத்தார்கள. அதில் எஸ்.பி சிலம்பரசன் கூறியிருப்பதாவது, ‘‘கன்னியப்பன் தனது மகன் முத்தையா சாதி ரீதியில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று புகார் கொடுத்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யபப்பட்டது. அதன் பிறகு வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையில் 6 தனி டீம் அமைத்து விசாரணையை தொடங்கினோம். அதன் முடிவில் இது சாதிரீதியான கொலை அல்ல. காதலிக்க வறுபுறுத்தி ஒரு பெண்ணை கேலி செய்ததால் அப்பெண்ணின் அண்ணன் முத்தையாவை கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதாவது முத்தையாவின் உறவினரான அப்புவிளையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கிண்டல் செய்திருக்கிறார்.
தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கேலியும், கிண்டலும் செய்ததை அப்பெண் அழுதுகொண்டே அண்ணன் சுரேஷீடம் கூறியிருக்கிறார். சுரேஷீம் பல தடவை முத்தையாவை எச்சரித்திருக்கிறார். கடந்த 22ம் தேதி மதியமும் முத்தையா அப்பெண்ணை கிண்டல் செய்ய, டென்சனான சுரேஷ், இனிமேலும் இவனை விட்டு வைத்தால் தனது தங்கைக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பான் என்று எண்ணி முத்தையாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனது நண்பர்கள் மதியழகன், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் 23ம் தேதி இரவு முத்தையாவை தேடியிருக்கிறார். முத்தையா தனது நண்பர் கார்த்திக்குடன் முள் காட்டுக்குள் இருந்ததை கண்டு பிடித்திருக்கிறார்.
உடனே மூன்று பேரும் முத்தையாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்கள். எனவே கொலையுண்டவரும், கொலையாளிகளும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்தான், சாதி ரீதியிலான கொலை இல்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் முத்தையா சாவுக்கு நீதி கேட்டு போராடி வரும் இயக்கத்தினர் இதை நம்பவில்லை, முத்தையாவின் உடலை வாங்க மறுத்து போராடி வருகிறார்கள்.
- அ.துரைசாமி