பாகுபலி யானைக்கு வாய் பகுதியில் உள்ள காயம் அதன் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இல்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் வெளியிட்டது வனத்துறை.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுற்றித்திரியும் பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தனது வாய் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிவது கடந்த 21 ம் தேதி வனத்துறையினரால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கும்கி யானைகளின் உதவியோடு பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிக்க வனத்துறை முடிவெடுத்தது. இதற்காக முதுமலை முகாமில் இருந்து விஜய் மற்றும் நசீம் என இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டது.
யானையை பின் தொடர்ந்து அதன் நடவடிக்கையைக் கண்காணிக்க சிறப்பு வனக்குழு மயக்க ஊசி செலுத்தவும், அதன் பின் சிகிச்சை அளிக்கவும் நான்கு மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்றிரவு அறிக்கையொன்றை வெளியிட்ட வனத்துறை, கடந்த ஒரு வார காலமாக பாகுபலி யானையை கண்காணித்து அதன் நடவடிக்கைகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் யானைக்கு வாயில் ஏற்பட்ட காயம் கடினமான மரக்கிளையினை முறிக்கும் போதோ அல்லது உண்ணும் போதோ ஏற்பட்ட இயலபான சிறிய காயம் தான் என்றும் இதற்கு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க அவசியமில்லை என தெரிவித்தது.
நேற்றுடன் (28ம் தேதி) பாகுபலி யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் கலைக்கப்படுவதாகவும் அறிவித்தது. இந்நிலையில், பாகுபலி யானையின் வாயில் ஏற்பட்ட காயம் இயற்கையாக குணமாகி வருவதையும் யானை வழக்கம் போல் தீவனம் உண்டு வருவதை உறுதிபடுத்தும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். பாகுபலியை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் கலைக்கப்பட்டாலும் அதனை வழக்கம் போல் உள்ளூர் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும் அது முழுமையாக குணமடைந்து அடர்ந்த காட்டினுள் செல்லும் வகையில் சில நாட்கள் கும்கி யானைகள் இங்கேயே இருக்கும் என மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.