சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் இருக்கின்றனர். 15 வருடத்திற்கு முன்னாள் இவரது மனைவி கோபித்துகொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே கிராமத்தில் அய்யம் பெருமாள் என்பவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். அய்யம் பெருமாள் மனைவி நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருந்திருக்கிறார்.
அய்யம் பெருமாளுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் விமலா பி.எஸ்.சி, பி.எட் முடித்துவிட்டு வீட்டில் இருந்திருக்கிறார். அய்யம் பெருமாளுக்கு வயதாகிவிட்டதால் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து போக வர கிருஷ்ணன் உதவி செய்திருக்கிறார். அப்போது கிருஷ்ணனுக்கும், விமலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அம்மாவிற்கு இவ்வளவு உதவி செய்திருக்கிறாரே என்று கிருஷ்ணன் மீது விமலாவிற்கு இரக்கம் வரவே, அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறி இருக்கிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்தபோது அய்யம் பெருமாள் மகன்கள் எதிர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். எனவே கிருஷ்ணன்-விமலா ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருவண்ணாமலையில் திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்பி இருக்கிறார்கள். பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸை நாட, போலீஸாரும் விமலா மேஜர் என்பதால் கிருஷ்ணனோடு அனுப்பி வைத்திருக்கிறது.
இது குறித்து போலீஸாரிடம் பேசினோம் "இதில் கிளை கதைகள் இருக்கிறது. அதை நாங்கள் ஆராயவில்லை. கிருஷ்ணன் முறையே விவாகரத்து வாங்கியிருப்பதாக தெரியவில்லை. கிருஷ்ணன் நல்லவராக இருந்திருந்தால் மகள் வயது இருக்கும் பெண்ணுக்கு புத்திமதி சொல்லி விலகியிருக்க வேண்டும், அப்படி செய்யவில்லை. அவரது நோக்கம் இந்த பெண்ணை ஈர்ப்பதாக இருந்திருக்கிறது. காலம்தான் இந்த காதலுக்கு விளக்கம் கொடுக்கும்" என்றார்கள்.
- கே. பழனிவேல்