ஒன்றரை வருடமா முயற்சிக்கிறோம்! முதல்வர் தரிசனம் கிடைக்கலை!

திமுகவுக்கும், மின்சாரத்துக்கும் அப்படி என்னதான் மோதலோ? அதன் ஒவ்வொரு ஆட்சியிலும் மின்சாரத்தால் தான் மிகப்பெரிய சர்ச்சைகளையும், சரிவுகளையும் சந்திக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2006–2011 திமுக ஆட்சியில் மின்வெட்டு விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. ஜெயலலிதா மிக எளிதாகவும், அதிக சீட்களுடனும் வெற்றி பெறுவதற்கு அந்த விவகாரம் கைகொடுத்தது. இந்நிலையில், பத்து ஆண்டுகள் காத்திருந்து ஒரு வழியாக 2021ல் ஆட்சியை பிடித்தது திமுக. ஆனால் இம்முறையும் மின்சாரத்தால் அந்த ஆட்சிக்கு சிக்கல்.

இந்நிலையில் மீண்டும் ஒரு மின்சார பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக, அதாவது கமர்ஷியல் மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டும், அல்லது போராட்டத்தில் குதிப்போம் என்று அரசுக்கு சவால் விட துவங்கியுள்ளன தமிழக பெரும் தொழில் அமைப்புகள்.

மின்சார கட்டணம் உயர்வு
மின்சார கட்டணம் உயர்வு

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்துள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்தபோது "பெரிதாய் ஒன்றும் ஒற்றுமை இருக்காது. சும்மா சின்ன சின்ன நிறுவனங்கள் மட்டும் கூடி நின்று ஆலோசித்துவிட்டு கலைவார்கள்" என்று உளவுத்துறை நினைத்தது. ஆனால் தமிழகம் முழுவதும் சுமார் 165 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

இந்த கூட்டத்திற்கு கோவையின் மிக முக்கியமான தொழில் கூட்டமைப்பான "கொடிசியா"வின் தலைவர் திருஞானம் தலைமை வகித்தது தான் ஹைலைட்.

குறிப்பாக சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சிடார்க், ஓஸ்மா, டேப்மா, லகு உத்யோக் பாரதி, சிஸ்பா உள்ளிட்ட பல முக்கியமான தொழில் அமைப்புகள் ஆலோசனையில் அமர்ந்தது அரசை அதிர வைத்துள்ளது.

அதைவிட, அவர்களின் தீர்மான முடிவுகள் இன்னும் அதிர்ச்சி தந்துள்ளது. தீர்மானம் பற்றி பேசிய கூட்டமைப்பின் முக்கிய முகங்கள் "தமிழ்நாட்டில் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறுந்தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்து சீரமைக்க வேண்டும்! என்று தொழில் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

எந்த பிரச்னை என்றாலும் தொழில்துறையினர் தன்னை நேரடியாக சந்திக்கலாம்! என முதல்வர் ஸ்டாலின் கோவையில் நடந்த தொழில் அமைப்புகளின் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் ஒன்றரை ஆண்டுகளாக முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை. பிரச்னைகளை விளக்க, அவரை சந்திக்க முடிந்தளவு முயற்சிப்போம்.

திமுக
திமுக

அவரை சந்தித்தால் எங்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம். சந்திக்க முடியவில்லை என்றால் போராட்டத்தில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை" என்று ஆதங்கமாக கூறியுள்ளனர். தொழில் நிறுவனங்கள்தான் ஒரு அரசின் பொருளாதார கட்டமைப்பின் முதுகெலும்பு. அதிலுள்ள சிக்கலை அலட்சியம் செய்தால் ஒட்டுமொத்தமாக கூனி குறுகி படுத்தேவிடும் மாநில பொருளாதாரம். அவர்களின் கதறலை கண்டு கொள்ளாது இருப்பது ஆபத்து. தமிழகத்தில் தொழில் அமைப்புகளை அண்டி பல லட்சம் குடும்பங்கள் உள்ளன. அந்த வாக்கு வங்கியினை இழக்கத்தான் போகிறதா திமுக?

- ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com