திருச்சி: கல்லணையில் தண்ணீர் திறப்பு - விவசாயிகளுக்கு அமைச்சர் நேரு அளித்த உறுதி என்ன?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு தண்ணீர் திறந்து வைத்தார்.
கல்லணையில் தண்ணீர் திறப்பு
கல்லணையில் தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்றிரவு தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் மதகுகள், ஷட்டர்கள் ஆகியவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து, நவதானியங்கள் மற்றும் மலர்களை துாவினார். இதில் அமைச்சருடன் 7 மாவட்ட ஆட்சியர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், நீர்ப்பாசனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன் மூலம் தஞ்சாவூர் 1.08, திருவாரூர் 92,214, நாகை 22,805, மயிலாடுதுறை 93,750, கடலூர் 24,976 ஏக்கர் என மொத்தம் 3,42,696 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, ஆஞ்சநேயர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால் சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

கல்லணையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி-க்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நீர்வளத்துறையின் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்லணையில் இருந்து முதல் கட்டமாக காவிரியில் 500 கன அடி, கல்லணை கால்வாயில் 100 கன அடி, கொள்ளிடத்தில் 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீர் திறப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘தமிழக முதல்வர் கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் தண்ணீரை திறந்து வைத்தார். அது நேற்றிரவு கல்லணைக்கு வந்துவிட்டது.

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட விளைநிலங்களின் பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீரை ஆட்சியர்கள், நான் உள்பட பொத்தானை அழுத்தி திறந்து வைத்துள்ளோம்.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் இயற்கை கை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இதனால் தண்ணீர் கடைமடைக்கு 10 நாட்களுக்குள் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெயில் கொஞ்சம் கடுமையாக இருப்பதால் ஈரப்பதம் மாறலாம். ஆகையினால் கடைமடைக்கு செல்வதில் ஓரிரு நாட்கள் கூடுதலாகலாம். விதை, பயிர், உரம் கையிருப்பில் உள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும்’ என்றார்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com