சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள பெரிய ஜோகிபட்டி கிராமத்தில் சீராக குடிநீர் விநியோகம் செய்யாத நிலையில், கிராமமக்கள் தங்களது வீடுகளில் மற்றும் மின்கம்பங்களில் கருப்புக்கொடியைக் கட்டி வைத்து சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதிக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அடிப்படை வசதியான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை எனவும் இதனால் சுதந்திர தினத்தை நாங்கள் புறக்கணிப்பு செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் கருப்புக்கொடியை கையில் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அங்கு சென்ற உளவுத்துறை காவலர் கிராம மக்களை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ரகசிய தகவல்களை பதிவு செய்ய வேண்டிய உளவுத்துறை காவலர் சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கடந்த பின்னர் கிராமத்திற்கு சென்று கிராம மக்களை மிரட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேப்போல் மத்தூர் காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும், இரு மாநில எல்லை பிரச்னைகளும் அரங்கேறி வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.