தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் இருக்கும் எப்.சி.ஐ குடோன் எதிரே தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜெயக்கொடிக்கு சொந்தமான லாரி ஷெட் உள்ளது.
இங்கு, கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஞானராஜ் (55) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த லாரி ஷெட்டில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை லாரி டிரைவர்கள் எழுந்து பார்த்தபோது தண்ணீர் தொட்டி அருகே காவலாளி ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தூத்துக்குடி டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் லாரி ஷெட்டில் வேலை பார்த்து வந்த ஒருவரை சமீபத்தில் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் அவர் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- எஸ்.அண்ணாதுரை