தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடந்தது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, ‘தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தி.மு.க அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாள்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நல்லது செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. நால்தோறும் திட்டம் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கொண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.
திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி தொடரும். 10 ஆண்டு காலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியனின் ஆட்சி. திராவிடம் யாரையும் பிரிக்காது. அனைவரையும் அரவணைக்கும்.
திராவிடம் என்பது காலாவதியான கொள்கை இல்லை. சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம். ஆரியப் படையெடுப்பை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். எந்த நோக்கத்திற்காக ஆளுநர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்?
தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுநரும் எதிர்க்கட்சி தலைவராக மாறிவிட்டார் போன்று உள்ளது. தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஆளுநர் உடனான தனிப்பட்ட நட்பு வேறு. கொள்கை வேறு. மிசா, பொடா, தடா ஆகியவற்றை நாங்கள் பார்த்தவர்கள். ஆட்சியாக, கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்’ என பேசினார்.