பழனி முருகன் கோவிலுக்கு ஆர்.என்.ரவி வருகை: பா.ஜ.க-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

போலீசாருடன் பாஜகவினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி முருகன் கோவிலுக்கு ஆர்.என்.ரவி வருகை: பா.ஜ.க-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க நின்ற பாஜகவினரையும், எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை வருகை தருகிறார். கோவையில் நடைபெறும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட ஆளுநர் பழனிக்கு வருகை தந்து மலை மீது சென்று முருகனை தரிசனம் செய்ய உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் வருகைகக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் கட்சியினர் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், தமிழக நலம் சார்ந்த அரசியலுக்கும், திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது.ஆளுநர் வருகையை கண்டித்து பழனி நகரில் நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையத்து போலீசார் அவர்களை கைது செய்ய வாகனங்களை கொண்டு வந்தனர். அவர்கள் கைதாக மறுத்ததால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

அதேபோல வரவேற்க தேசியக்கொடியுடன் வந்திருந்த பாஜகவினருக்கும் அனுமதி இல்லாததால் அவர்களையும் கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினார்.அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை டிஎஸ்பி சரவணன் கைது செய்ய இழுத்து சென்ற போது பாஜகவினருக்கும் டிஎஸ்பி சரவணன் உள்ளிட்ட காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணிக்கு பழனிக்கு வருகை தரும் ஆளுநர் ரவி 6 மணிக்கு மலை மீது நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்ய உள்ளார்.

ஆளுநர் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து உள்ளனர். முன்னதாக ஆளுநரின் வருகையையொட்டி சாலைகள் சீரமைக்கப்பட்து.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com