’பணியிலிருந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை' என உருக்கமாகப் பதிவிட்டு வேலையை ராஜினாமா செய்வதாக அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி பிரிதிவிராஜ் அறிவித்தது நாடகமாடும் என்கிறார்கள் விருது நகர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ். கள்ளக்காரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். கடந்த கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக பிரிதிவிராஜ். 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த கிராம நிர்வாக அலுவலருக்கான பரிசு மற்றும் கேடயம் பெற்றார். இந்நிலையில், ’’தனது கடந்த 13 ஆண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை’’ எனக் கூறி தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சுழி தாலுகாவில் அலுவலக உதவியாளராக இருந்த துரைப்பாண்டியன் பணியின் போது திடீரென இறந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் பிரிதிவிராஜுக்கு 2011ல் கிராம அலுவலர் வேலை கிடைத்தது. இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில்,’’நான் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை. சட்ட விரோத செயல்களுக்குத் துணை போக மாட்டேன். மக்களுக்காக உழைப்பேன் என்று அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் வருகிறார்கள். ஆனால், ஒரு கால கட்டத்தில் சமூக அழுத்தம் காரணமாகப் பணமே குறி என்று மாறி விடுகிறார்கள்.
உடல் நலம் பாதித்த என் மனைவி, வயதான என் தாய், மகள், மகன் இவர்களின் நலன் கருதி 24 மணி நேரம் நேசித்த இந்த அரசுப் பணியைத் துறந்து செல்கிறேன். ஒரு கிராம அலுவலராக விதிகளுக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன். ஆனாலும், எந்த மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் எதையும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தது. மக்களுக்குச் சேர வேண்டிய உதவியை அரசிடம் இருந்து பெற்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதுவே அரசுப் பணி. ஆனால், கொம்பு முளைத்து விட்டதாய் திரியும் பலருக்கு இது உரைப்பதே இல்லை.
உரைக்கும் நாள் வந்து சேரட்டும் அந்த நன்னாளில் நாம் ஒரு நேர்மையான அரசு ஊழியனாய் இருந்தேன் என்று கடைசி பெருமூச்சை விட்டபடி உயிர் பிரியக் காத்திருக்கிறேன்’’என்று குறிப்பிட்டு இருக்கிறார். வேலையை பிரிதிவிராஜ் ராஜினாமா செய்தது குறித்து அனைவரும் வியந்து வந்த நிலையில் அதில் உண்மை இல்லை என்கின்றனர் விருதுநகர் வருவாய்த்துறை அலுவலர்கள்.
இது பற்றி விருதுநகர் வருவாய்த்துறையினர் நம்மிடம் கூறுகையில், ’’கிராம அலுவலர் பிரிதிவிராஜின் மனைவி உடல்நிலை பாதித்து கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே பிரிதிவிராஜ் கோவையில் மனைவியுடன் செட்டிலாக முடிவு செய்து அங்கு சொந்த தொழில் ஏற்பாடு செய்துள்ளார். எனவே அருப்புக்கோட்டை தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ-க்கு தனது மனைவியின் உடல் நலத்தைக் காரணம் காட்டி ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேர்மையாக பணியாற்ற முடியவில்லை என்று அவரது கடிதத்தில் குறிப்பிடவில்லை. அவரது மனைவியின் பெற்றோர்கள் கல்பட்டறை தொழில் செய்து வசதியாக இருக்கின்றனர்.
பிரிதிவிராஜ் நேர்மையானவராக இருந்தாலும் பப்ளிசிட்டிக்காக எதையும் செய்வார் என்பது உள்ளூரில் எல்லோருக்கும் தெரியும். சொந்த காரணங்களுக்கு ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டு விட்டு இப்போது நேர்மையாக பணியாற்ற முடியவில்லை என்று ஊடகத்தில் பேட்டி தருகிறார். நேர்மையாக அரசு வேலை செய்ய முடிவில்லை என்று ஊடகத்தில் செய்தி வெளியானால் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், தனது ராஜினாமா குறித்து அவரிடம் மீண்டும் விசாரணை செய்வார்கள். அதோடு அவரை ரிலீவாக அனுமதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இதெல்லாம் ஒரு விளம்பரம் ஸ்டாண்ட்தான்’’ என்கின்றனர்.-கார்த்தி