ஜூனில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.
எனவே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு வசதியாக அனைத்து தனியார் பள்ளி வேன் மற்றும் பஸ்களில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்திட பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் ஆகியவை கூட்டாக ஆய்வு செய்திட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு போக்குவரத்துறை வட்டார அலுவலக எல்லைப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி மற்றும் பஸ்களை அந்த வட்டார போக்குவரத்துறை அலுவலகங்களில் ஆர்.டி.ஓ., பிரேக் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வுகள் செய்ய வேண்டும்.
மேலும் மெட்ரிக்குலேஷன் இயக்குனரகம், போலீஸ், தீயணைப்புத்துறையினர்களைப் பள்ளி வாகன ஆய்வுகளில் ஈடுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதி 2012ன்படி பாதுகாப்பாகவும், சிறந்த முறையில் இயங்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். வேன் மற்றும் பஸ்களின் தரம், முதலுதவிப்பெட்டி மற்றும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைதளம், டிரைவர்கள் லைசென்ஸ், வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, வாகனத்தின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கேமிராக்கள் போதிய பாரமரிப்பில் இருக்கிறதா என்பதை இந்தக் கூட்டு குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். சிறு சிறு குறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் பள்ளி வாகனங்களில் குறைகள் நிவர்த்திச் செய்யப்பட்டு அவை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் தனியார் பள்ளி வேன் மற்றும் பஸ்களின் தரம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.