’பணியிலிருந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை' என உருக்கமாகப் பதிவிட்டு வேலையை ராஜினாமா செய்வதாக கள்ளக்காரி கிராம நிர்வாக அதிகாரி பிரிதிவிராஜ் சாஸ்தா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள கோவில்வைத்து கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல்காரர்களால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளக்காரி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் பிரிதிவிராஜ் தனது வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காரி என்ற கிராமத்தில், கிராம அலுவலர் பணிபுரிந்து வருபவர் பிரித்திவிராஜ். சமூக சேவகரான இவர், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கிராம நிர்வாக அதிகாரி என பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில், கிராம அலுவலர் பணியைத் தொடர முடியவில்லை என, தனது மேல் அதிகாரியிடம் பிரித்திவிராஜ் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். 13 வருடங்களாக ஒரு நேர்மையான அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் அரசியல்வாதிகளால் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாகவும், கிராம அலுவலர் பணியில் மாற்றத்தை தன்னால் கொண்டு வர முடியவில்லை எனவும் கூறி, விரக்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’13 ஆண்டுகளாகக் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தேன். கடந்த 26.04.2023 அன்று, '’பணியிலிருந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை'’எனக் கூறி எனது ராஜினாமா கடிதத்தை சம்பர்ப்பித்துள்ளேன். எனது அதிகாரத்துக்கு உட்பட்டு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதனை நான் செய்து விட்டேன்.
இருந்தாலும் இந்தப்பணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடிந்ததா? எனக் கேட்டால் அது கேள்விக்குறி தான். நேர்மையான ஒரு அரசு அதிகாரி சந்திக்கக்கூடிய அடிப்படை பிரச்சினைகள் இருக்கின்றன. நான் 2011ம் ஆண்டு பணிக்கு வந்தேன். 2011-12 ஆரம்ப கால கட்டங்களிலேயே நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்து விட்டேன். அரசியல் அழுத்தங்களையும், எனது உயரதிகாரிகளின் அழுத்தங்களையும் சந்தித்து இருக்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.