சிவகாசி அருகே மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (45). விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக பதவி வகிக்கிறார். சிவகாசி மாநகர பா.ஜ.க துணைத்தலைவர் பாண்டியன்.இவரது மகன்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.இவரிடம் பேசிய மாவட்ட தலைவர் சுரேஷ் உங்கள் மகன்களுக்கு மத்திய அரசின் ரயில்வே மற்றும் கப்பலில் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.11 லட்சம் செலவாகும் என்று கூறினார். இதை நம்பிய பாண்டியன் சில தவணைகளில் ரூ.11 லட்சத்தை சுரேஷ்சிடம் தந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.இது பற்றி பாண்டியனின் புகாரின் பேரில் சுரேஷ் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் மீது கடந்த டிசம்பர் 16-ம் தேதி வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர்.
இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை சுரேஷ்க்கு முன் ஜாமீன் வழங்கியது.அதோடு அவர் ஏமாற்றியதாக கூறிய ரூ.11 லட்சத்தில் 50 சதவீதம் தொகையான ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் 2 ஜேஎம் கோர்ட்டில் 15 நாட்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் முன் ஜாமீன் பெற்ற அவர், அதிலிருந்து விலக்கு கேட்டும் பணத்தை கட்டுவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டும் மனு தாக்கல் செய்து ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யாமல் தொடர்ந்து இழுத்தடித்தார்.
இந்நிலையில், இறுதியாக ஐகோர்ட் மதுரை கிளை இன்னும் 15 நாளில் சுரேஷ் பணத்தை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரது முன் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று ஏப்.24-ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சுரேஷ் ரூ.5.50 லட்சம் பணம் டெபாசிட் செய்யாமல் இருந்துள்ளார்.இந்த நிலையில், ஐகோர்ட் கிளை வழங்கிய 15 நாள் கெடு மே 15-ம் தேதி முடிந்தது. அவரது முன்ஜாமீன் ரத்தானது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் திருத்தங்கல் வீட்டில் காரை கழுவிக்கொண்டிருந்த சுரேஷ்சை அதிரடியாக கைது செய்து விருதுநகர் கிளை சிறையில் அடைத்தனர்.