விநாயகர் சதுர்த்தி கொண்டாட சென்னை காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்!

எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்,விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

சென்னையில் விநாயர் சதுர்த்தி அன்று சிலைகள் வைத்து வழிபட சில அறிவுரைகளை சென்னை காவல்துறை வழங்கி உள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்,விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

தீ பாதுகாப்பு விதிமுறைகளும்,விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com