விழுப்புரம்: பயணவழி ஓட்டல்களில் நடந்த ரெய்டு - சிக்கிய காலாவதி உணவுப் பொருள்கள்

சுகாதாரமின்றி காணப்பட்ட வெஜிடபிள் பிரியாணி, வெஜிடபிள் பப்ஸ் உள்பட 25 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது
காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது

விக்கிரவாண்டி பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பேருந்துகள் பயண வழி உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான பொருட்களைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த பயணியர் உணவகங்களை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் , ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, இரண்டு உணவகங்கள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து உணவகங்களில் சுகாதாரமின்றி காணப்பட்ட வெஜிடபிள் பிரியாணி, வெஜிடபிள் பப்ஸ், சமோசா மற்றும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை சுமார் 25 கிலோ அளவிலான பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும் உணவகம் நடத்துவோருக்கு குறைகளை சுட்டி காட்டியதுடன் அதனை எவ்வாறு நிவிர்த்தி செய்யுமாறு 6 கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பயண வழி உணவகங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com