விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர் பணியிலிருந்த மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டுக் கத்தியால் குத்திய கணவனைப் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(27) கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரணி (25). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 2-ம் தேதி குடும்பத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் வீட்டில் சரத்குமார், பிளீச்சிங் பவுடர் மற்றும் லைசால் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சரத்குமார் நேற்று 3-ம் தேதி, தான் சிகிச்சை பெறும் வார்டிலிருந்து புறப்பட்டு மனைவியிடம் பேச வேண்டும் என பரணி பணி செய்யும் இடத்திற்குச் சென்றார்.
தீவிரமாகப் பணியிலிருந்த மனைவி பரணியிடம் சரத்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் தலை, கழுத்து, மற்றும் கையில் சரமாரியாகக் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற சரத்குமாரை அங்கிருந்த காவலாளிகள் மடக்கி பிடித்தனர்.
இது பற்றித் தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.