நல்லம்பள்ளி அருகே கடை கோடியில் சிக்கி தவிக்கும் கிராம மக்கள் மழை காலத்திற்கு முன்பே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் மூலப்பள்ளத்து கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூலித்தொழில் இவர்களின் பிரதானமாக உள்ளது.இவர்கள் வேலைக்கு செல்லவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் அவர்கள் கிராமத்தில் அருகே உள்ள ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இந்த வழியில் மழை காலங்களில் அளவு கடந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயங்களில் இவர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வரும் நிலையும், பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.மற்ற மாதங்களில் வறட்சியே நிலவி வருகிறது. இருப்பினும் மழை பெய்யும் இரண்டு மூன்று மாதங்கள் இவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ஆற்றில் குறுக்கே கயிறுகளை கட்டி அபாயகரமாக கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் எர்ரபையனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்டவர்கள் இவர்களுக்கான வாக்குரிமை மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை பெறுவதற்கு மஞ்சநாயக்கனஹல்லி ஊராட்சியை நம்பி உள்ளனர்.வாக்களிக்கும் கிராமத்தைச்சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுங்கள் என்று கேட்டால் ஓட்டு போட மட்டும் எங்கள் ஊருக்கு வாருங்கள் உங்களுக்கு அடிப்படை வசதி வேண்டுமென்றால் உங்கள் ஊர் தலைவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என உதாசீனப்படுத்துவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது இவர்கள் வசிக்கும் பகுதி நல்லம்பள்ளி தாலுகாவிற்கும் வாக்களிக்கும் பகுதி பென்னாகரம் தாலுகாவிற்கும் உட்பட்டு உள்ளதால் கடைக்கோடியில் இரண்டு தாலுகாவிற்கும் இடையில் சிக்கிக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுநாள் வரை அரசின் மூலம் சாலை வசதி, குடிநீர், பாலம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இரண்டு தாலுகாவையும் விட்டுவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றாலும் இவர்களுக்கான தீர்வு இதனால் வரை கிடைக்கப்பெறவில்லை ஓட்டு கேட்கும்போது மட்டும் ஆற்றை கடந்து வந்து கேட்கின்றனர். பாலம் கட்ட சொன்னால் திரும்பி கூட பார்ப்பதில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையால், மழைக்காலத்துக்கு முன்பாகவே தங்கள் பகுதியில் பிரதான கோரிக்கையாக உள்ள ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
பொய்கை கோ.கிருஷ்ணா