திருச்செந்தூர் : கிராம சபை கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் வெளிநடப்பு:காரணம் என்ன?

மக்கள் சொன்ன தீர்மானங்களை வைக்க மறுத்தார் ஊராட்சி மன்ற தலைவர். அதனால் அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்செந்தூர் : கிராம சபை கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்  வெளிநடப்பு:காரணம் என்ன?

திருச்செந்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்ர அருகிலுள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. முத்தையாபுரம் அரசு பள்ளியில் வைத்து நடந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜா, செயலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முத்தையாபுரம் பகுதியில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிராம சபை கூட்டம் நடந்ததால் அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆனால், அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஊராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் எல்லப்பநாயக்கன் குளத்தை சுற்றிலும் சில தனியார்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான இடத்தில் கட்டவேண்டும். பொதுமக்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்திடக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்படாத தீர்மானங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், பொதுமக்களுக்கும் ஊராட்சி தலைவர், செயலர்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், கிராம சபை கூட்டத்தில் மக்கள் சொன்ன தீர்மானங்களை வைக்க மறுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜா. அதனால் அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கோபமான ஊராட்சி தலைவர் மகாராஜா, கூட்டத்தை பாதியிலேயே கலைப்பதாக அறிவித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மக்களின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றாத மேலத்திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தையாபுரம் பகுதியில் அனைத்து துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இது பற்றி மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜாவிடம் கேட்டோம் "மேல திருச்செந்தூர் ஊராட்சியில் உள்ள முத்தையாபுரம் பகுதி மக்கள் நான் தலைவர் ஆனதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தொடர்ந்து கூட்டத்தை அவர்கள் ஊரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று முத்தையாபுரத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் விரும்புவதை எல்லாம் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது என்றால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் பாதியிலேயே முடிந்து விட்டது" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com