விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், விஷ சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதை தடுப்பதற்காக அந்தந்த மாவட்ட எஸ்.பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆங்காங்கே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் குடித்து இருவர் இறந்த நிலையில் மதுக் கூடங்களில் அனுமதி இன்றி பார் நடத்துவது மற்றும் மது பாரின் அனுமதி நேரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 21 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மது விற்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவர்களை மட்டுமே மதுபான கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிரபல நளா என்ற மதுபானக் கூடத்தில் இன்று பிற்பகல் 4 வயது மகனுடன் அவரது தந்தை தனது நண்பர்களுடன் அமர்ந்து மது குடிக்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி 4 வயது சிறுவன் மதுபான கூடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி சிறப்பு விசாரணை நடத்தி 4 வயது சிறுவனை மதுபான கூடத்தில் அனுமதித்த ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.