சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தானியங்கி மது விற்பனை இயந்திரம் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'மது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனால், இதனை தடுக்கும் வகையில், 4 வணிக வளாக மதுக்கடைகளில் மட்டும், கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மது விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
கடை மேற்பார்வையாளர், பணியாளர்கள் முன்னிலையில் விற்பனை நடைபெறும். இதன் மூலம் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படமாட்டாது. பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது வாங்க முடியும். இதுகுறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை ஏற்காத அரசியல் கட்சிகள், தமிழக அரசின் இந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசின் கஜானாவை நிரப்ப தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது. மது பானத்தை தாராளமாக பயன்படுத்த, இளைஞர்களை தி.மு.க. அரசு ஊக்குவிக்கிறது. மக்களை பாழாக்கும் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம். எனவே, தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், 'தானியங்கி மது விற்பனை நிலையங்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது குடிப்பழக்கத்தை அதிகரிக்கும். தமிழக அரசு மது விற்பனையை கட்டுப்படுத்தவேண்டுமே தவிர, மது விற்பனையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களால் தி.மு.க-விற்கு மோசமான பெயர் தான் கிடைக்கும். எனவே, இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்கிறார்.
இதபோல, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.