வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகளும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அப்படியும் பல திருமணங்கள் ரகசியமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வேலூரில் நேற்று இலவச எண்ணான 181 க்கு ஒரு அழைப்பு வந்தது. இது பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் எண். அவர்கள் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கிராமம் ஒன்றில் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14- வயது சிறுமிக்கும், 34- வயதான ஆணுக்கும் திருமணம் நடக்க இருந்ததை பர்த்து அதிகாரிகளே பதறிப் போனார்கள். திருமண வீட்டார், ’’எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சொந்த தாய்மாமன் தான் அவர். எல்லோரது விருப்பத்தின் பேரில் தான் இந்தத் திருமணம் நடக்கிறது. யாரோ வேண்டாதவர்கள் சிலர் உங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்ல, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விட்டனர். குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமல்ல, இந்தத் திருமணத்திற்கு வந்தவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்று சொல்லிக்கொண்டே திருமணத்திற்கு வந்தவர்களை அதிகாரிகள் வீடியோ எடுக்க, வந்திருந்த உறவினர்கள், சாப்பாடு கூட வேண்டாம் என பிய்த்துக் கொண்டு ஓடினார்கள்.
அதிகாரிகள் குழந்தையின் பெற்றோர்களிடம், குழந்தை திருமணம் சட்ட விரோதமானது. நாங்கள் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.
-அன்புவேலாயுதம்