ஆங்காங்கே மோசடி நிதி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பொதுமக்களை மோசடி செய்து வர, ஒரு நிறுவனம் ஐம்பது, நூறு என்று அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்து கோடிக்கணக்கில் சுருட்டியிருப்பது பேரதிர்ச்சி. இந்த விவகாரம் வேலூர் எஸ்.பி. ரஜேஷ் கண்ணாவிடம், நேற்று பணம் செலுத்தி ஏமாந்த முகவர்கள் புகார் அளித்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணாவிடம் நேற்று இருவர் புகார் மனு கொடுத்தனர். அதில், வேலூர் சய்நாதபுரத்தில் அஸ்யூர் அக்ரோடெக் லிமிடெட் என்ற பெயரில் சிறுசேமிப்பு நிதி நிறுவனம் இயங்கி வந்ததுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சேலத்தில் இயங்குகிறது. இதன் நிர்வாகிகளாக தங்கப்பழம், ராக ராஜேந்திரன் ஆகியோர் இருந்தனர். இதில் 2010ம் ஆண்டு முதல் எங்கள் பகுதியில் நாங்கள் முகவர்களாக பொதுமக்களிடம் பணம் வசூலித்து செலுத்தி வந்தோம். பொதுமக்களும் சேமிப்புக்கு வட்டி வருகிறது என்று செலுத்தி வந்தனர்.
இதுவரை 50 கோடி ரூபாய் வரை வசூலித்து செலுத்தியுள்ளோம். ஆனால், அவர்கள் உரிய தவணைக்காலம் முடிந்தும் யாருக்கும் அசலும் கொடுக்கவில்லை. வட்டியும் கொடுக்கவில்லை. இது குறித்து வேலூர் அலுவலகம், சேலம் தலைமை அலுவலகம் என பலமுறை போய் கேட்டுவிட்டு வந்திருக்கிறோம். ஆனால், அவர்கள் உரிய பதில் சொல்லவில்லை. பணமும் கொடுப்பதுபோல் தெரியவில்லை. அதனால், சேமிப்பு பணம் செலுத்திய பொதுமக்கள் எங்கள் வீடுகளில் வந்து தகராறு செய்கிறார்கள். அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்றுக்கொடுக்க வெண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி தங்கள் குழந்தைகள் கல்லூரிக் கட்டணத்திற்கும், கல்யாணச் செலவிற்கும், பிற்காலத்தில் உதவும் என செலுத்திய பணம் பறிபோனதில் பரிதவித்து கிடக்கிறார்கள் வேலூர் பகுதி ஏழை எளிய மக்கள்.
-அன்புவேலாயுதம்