வேலூரில் உள்ள, ஐ.எஃப்.எஸ். உரிமையாளர் லட்சுமி நாராயணனுக்கு சொந்தமான வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட முயற்சி செய்தபோது, ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேர் தப்பிவிட்டனர்.
நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர். அவரது வீடு வேலூர் அருகில் உள்ள காட்பாடி அடுத்த வி.ஜி. ராவ் நகர் சி.செக்டரில் உள்ளது.
பணம் இரட்டிப்பாக தருகிறேன், ஒரு லட்சத்திற்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை வட்டி தருகிரேன் என்று பல ஆயிரம் கோடி பணத்தை பெற்றுக்கொண்டு, இவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார்.
இதனால், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சீல் வைத்திருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளார். பூட்டு உடைபடும் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரரான இளையராஜா என்பவர் கட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது 5 பேர் தப்பி ஓடினர். இதில், காட்பாடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மட்டும் சிக்கினார்.
மேலும், தப்பி ஓடியவர்கள் நவீன், பிரபு, சதீஷ், சுரேஷ் என்றும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜசேகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, காட்பாடி டி.எஸ்.பி. பழனியிடம் பேசினோம். ‘ஐ.எஃப்.எஸ். நிறுவனர் என்கிற விவரம் தெரியாமல் அவர்கள் திருட வந்ததாக சொல்கிறார்கள்.
ஒருவரை ரிமாண்ட் செய்துள்ளோம். மீதி 5 பேர் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளம் அறியப்பட்டுள்ளது, கிரைம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் சிக்குவார்கள்.’என்றார்.
அதே நேரத்தில் அவர்கள் வேறு யார் தூண்டுதலில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் எடுக்க வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அன்புவேலாயுதம்