வாணியம்பாடி அருகே குப்பை கொட்டும் இடத்தை சிறுவர் பூங்காவாக மாற்றிய ஊராட்சி மன்ற நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குழந்தைகளை வைத்து பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் கிராமத்தில் குப்பை கொட்டும் இடத்தை அம்பலூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சிறுவர்களுக்காக விளையாட்டு பூங்கா அமைக்கும் இடமாக மாற்றியமைத்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவர் பூங்காவை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அம்பலூர் ஊராட்சியை சேர்ந்த சிறுவர்களை வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் சிறுவர்களை ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சலாட்டி சிறுவர்களை மகிழ்வித்தார். அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் நட்டு வைத்தனர். இதனால், காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவானது மரங்களால் உறிஞ்சப்பட்டு உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வெளியேறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.