நாகப்பட்டினம்: ‘தி.மு.க சேர்மன் மீது பொய் புகார் அளித்தோம்’ - தூய்மைப் பணியாளர்கள் திடீர் பல்டி

வேளாங்கண்ணி பேரூராட்சியில் தி.மு.க பெண் சேர்மன் தரக்குறைவாக பேசி தாக்கியதாக மனு கொடுத்த மறுநாளில், தூய்மைப் பணியாளர்கள் தங்களது புகாரை வாபஸ் பெற்றனர்.
புகார் அளித்த பெண்கள்
புகார் அளித்த பெண்கள்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் ரேவதி, ராணி ஆகிய இருவரும் ஆணையத்தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்து பேசினர்.

அப்போது அவர்கள், ‘கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேரூராட்சியில் குப்பை அள்ளும் பணியில் இருந்தபோது சேர்மன் டயானா சர்மிளா இருவரையும் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார்.

அங்கே சென்ற எங்களை சூபர்வைசர் சவுமியாவும், சேர்மனும் சேர்ந்து சாதியை சொல்லி தகாதவார்த்தைகளால் திட்டியதோடு, ‘உங்களுக்கு என்னடி கவுரவும் கேட்குது?’ என்றபடி தாக்கினார்கள். மேலும் வேலையை விட்டும் அனுப்பிவிட்டனர்.

இதனால் நாங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமப்பட்டு வருகிறோம்’ என்றனர். இதையடுத்து ஆணையத்தலைவர் வெங்கடேசன் அருகில் இருந்த எஸ்.பி ஜவஹரிடம் இதுதொடர்பாக எஸ்.சி., எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்தார்.

இச்சம்பவம் குறித்து சேர்மன் டயானா சர்மிளா சார்பில் அவரது சகோதரரும், தி.மு.க ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட இருவரும் அடிக்கடி வேலைக்கே வராமல் வேலைக்கு வந்ததாக பொய் சொல்லி வந்தனர். அவர்களை ஒருநாள் சூப்பர்வைசர் சவுமியா கேட்கும்போது ‘அங்கே வேலை செய்கிறோம். இங்கே வேலை செய்கிறோம்’ என்று கூறி ஏமாற்றியிருக்கின்றனர்.

அவர்கள் வேலை செய்வதாக சொல்லும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தால் அங்கே இருப்பதில்லை. இதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாகத்தான் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர்.

இந்த கோபத்தில் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிலரின் தூண்டுதல் காரணமாக பொய்யான புகார் கொடுத்துள்ளனர். இப்போது அவர்களே தங்கள் தவறை உணர்ந்து புகாரை வாபஸ் பெற்றதோடு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பணியில் சேர்ந்துவிட்டனர்’ என்றார்.

இதுகுறித்து புகாரை வாபஸ் பெற்ற ரேவதி, ராணி கூறுகையில், ‘நாங்கள் வேளாங்கண்ணி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். கடந்த 7ம் தேதி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் தூய்மைப்பணியினை மேற்கொள்ளவில்லை.

பணியிடத்தில் நாங்கள் இல்லாதது குறித்து சூபர்வைசர் சவுமியா சேர்மனிடம் புகார் தெரிவிக்க அவர் நாங்கள் பணியை சரியாக செய்யாத காரணத்தாரல் 3 நாட்கள் எங்களை பணிபுரிய அனுமதிக்கவில்லை.

ஆனால் நாங்கள் சிலரது தூண்டுதல் காரணமாக சேர்மன் மீதும், சூபர்வைசர் மீதும் பொய்யான புகாரை ஆணையத்தலைவரிடம் கொடுத்துவிட்டோம். இவ்வாறு பொய் புகார் அளித்தால் எங்களுக்கு திரும்பவும் வேலை கிடைத்துவிடும் என்கிற தவறான எண்ணத்தில் இப்படி செய்துவிட்டோம். இதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்து வேலை செய்து வருகிறோம்’ என்றனர்.

தி.மு.க சேர்மன் மீது தூய்மைப்பணியாளர்கள் அளித்த புகாரால் ஏற்பட்ட பரபரப்பு ஒரே நாளில் காற்று இறங்கிய பலூனாக ஆகி ஓய்ந்துவிட்டது.

- ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com