வேதாரண்யம் அருகே கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடற்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீனவர்களிடம் பேசினோம்.
’தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ள ‘மோக்கா புயல் காரணமான கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ஏற்கனவே மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் எச்சரித்திருந்தனர். இதனால் நாங்கள் யாரும் இன்றோடு 8-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் தான், கடல் சுமார் 700 அடி தூரம் வரையில் உள்வாங்க மீனவர்கள் சிலர் சுனாமி வந்துவிடுமோ என பயந்துபோய் உள்ளனர். இந்தப்பகுதியில் இதுபோல் கடல் உள்வாங்கிய நிகழ்வுகள் எப்போதாவதுதான் நடைபெறும். புயல் சமயங்களில் அதிக சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்குமே தவிர இதுபோல் இருந்ததில்லை. அதனால்தான் மீன்வர்களிடம் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது. மீன்பிடிக்கச்செல்லாமல் வீடுகளில் முடங்கிப்போய் இருக்கின்றோம்.” என்றனர்.
நாகை துறைமுக அதிகாரிகளிடம் பேசினோம். “வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயல் நாளை 14-ம் தேதி காலை வங்கதேசம் மியான்மர் இடையே கரையை கடக்கும் என தெரிகிறது. இந்த புயல் உருவானதை குறிக்கும் வகையில் நாகை துறைமுக அலுவலகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது." என்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகளோ, “இப்போது வேதாரண்யம் கடற்பகுதியில் வழக்கத்திற்கும் மாறாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதற்கு காரணம் மோக்கா புயலின் நகர்வுதான். புயல் கரையை கடந்த பின்னர் தான் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். புயல் காரணமாகத்தான் கடல் நீர் உள்வாங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறதே தவிர வேறு காரணங்கள் இல்லை. இதனால் மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையமோ, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான நிலைமை ஏற்படலாம்” எனவும் எச்சரித்துள்ளது.
-ஆர்.விவேக் ஆனந்தன்