வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பூவதேவன்காடு பகுதியைச்சேர்ந்தவர் வனிதகுமாரி (49). இவரது கணவர் பாண்டியன்.கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கணவர் பாண்டியன் தஞ்சாவூரில் தனியாக வசித்து வருகிறார். வனிதகுமாரி மருதூர் தெற்கில் புதிதாக வீடு கட்டி அதில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் வனிதகுமாரி இட்லிக்கு மாவு அரைத்துகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து வனிதகுமாரியின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை தரும்படி மிரட்டியிருக்கின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வனிதகுமாரி பயத்தில் அலறியிருக்கிறார். உடனே மர்ம நபர்கள் வனிதகுமாரியின் கை, கால்களை பிடித்துக்கொண்டு கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். அத்துடன் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை பறித்துகொண்டதோடு, காதில் இருந்த தோடுகளையும் கழற்றித்தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு வனிதகுமாரி மறுக்கவே தோடுடன் காதை அப்படியே கத்தியால் கொடூரமாக அறுத்துள்ளனர். இதனால் ஏராளமான ரத்தப்போக்கு ஏற்பட்டு வனிதகுமாரி மயங்கிச்சரிந்துள்ளார். சுமார் 10 பவுன் நகைகளை பறித்துக்கொண்ட மர்மநபர்கள் மயங்கிய வனிதகுமாரியை அப்படியே விட்டுவிட்டு எஸ்கேப்பாகி இருக்கின்றனர்.
பின்னர் 6 மணியளவில் அக்கம்பக்கத்தினர் எதேச்சையாக வனிதகுமாரியின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரத்தம் வழிய வனிதகுமாரி மயங்கிய நிலையில் இருக்கவே, உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி விட்டு போலீசாருக்கும் தகவல் சொல்லியிருக்கின்றனர். வனிதகுமாரின் உடல்நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வாய்மேடு போலீசாரிடம் பேசினோம். “நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம். குற்றவாளிகள் குறித்து நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. ஓரிருநாளில் பிடித்துவிடுவோம். இந்த பகுதியில் இதுபோன்ற கொள்ளைமுயற்சி சம்பவங்கள் எதுவும் இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை.” என்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்