வேதாரண்யம் மீனவர்களை தாக்கி மீன்கள், பொருட்கள் கொள்ளை- இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

எங்களில் ஒருவருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்து ரத்தம் ஆறாக ஓடியது.
மீனவர்கள் மீது தாக்குதல்
மீனவர்கள் மீது தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி 800 கிலோ மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள், செல்போன்களை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்ககடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொள்ளை அடிக்கும் ’பகீர்’ சம்பவங்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி பகுதியைச்சேர்ந்த 19 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இரண்டு பைபர் படகுகளில் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 500 கிலோ மீன்கள், டீசல், செல்போன், ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் என அனைத்தையும் கொள்ளையடித்துச்சென்றனர்.

அந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள் நேற்றையதினம் வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் விசைப்படகு ஒன்றில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தி கொள்ளையை அரங்கேற்றியிருப்பது மீனவர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் பேசினோம். “நேற்று இரவு எங்கள் கிராமமான ஆறுகாட்டுத்துறையிலிருந்து 22 கடல்மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது 3 பைபர் படகுகளில் கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். எங்களில் ஒருவருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்து ரத்தம் ஆறாக ஓடியது. இதேபோல் அனைவருக்கும் கை, முகம் என பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

கொள்ளையர்கள் அனைவரும் எங்களை மிரட்டி 800 கிலோ மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவிகள், செல்போன்கள் என அனைத்தையும் பறித்துச்சென்றனர். இந்த பொருட்களின் விலை 6 இலட்சத்தை தாண்டும். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நாங்கள் அப்படியே கரைக்கு வந்து தகவலை கூறினோம்.” என்றனர்.

பின்னர் காயமடைந்தவர்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்குள் இது 5வது தாக்குதல் சம்பவம் என்கின்றனர் மீனவர்கள்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com