வேதாரண்யம் பகுதியில் பாதுகாப்பில்லாத பாலம் கட்டுமானப் பணிகளால் தொடரும் உயிரிழப்புகளைத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம்-கோடியக்கரை இடையே நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தார் சாலையின் குறுக்கே கோடியக்காடு எல்லையில் உள்ள பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும்பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பன்னாள் ஊராட்சியைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் கோடியக்கரை நோக்கி வந்த போது எதிர்பாராரவிதமாகக் கட்டுமானப்பணி நடைபெறும் கம்பிகள் நிறைந்த பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானார். இதனால் உடல், தலைப்பகுதிகளில் அடிபட்டதில் காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொதித்தெழுந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்துக் கோடியக்கரையைச்சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர், “பாலம் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தக் கட்டுமான பணி எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் கட்டப்படுவதைத்தான் கண்டிக்கிறோம். பாலத்திற்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என்ற முன்னறிவிப்புப் பலகை எதுவும் வைக்கவில்லை.
அத்துடன் கட்டுமானப்பணிகள் நடைபெறும் பாலத்தின் குறுக்கே தடுப்புச்சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோடியக்கரைக்கு வரும் புதிய நபர்கள் பலர் பாலத்தில் உள்ள கம்பிகளில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது மதன் என்ற நபர் கடுமையான காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.
இங்கே மட்டுமல்லாமல் வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பாலம் கட்டுமான பகுதிகளிலும் இதுபோல் முன்னெச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் இல்லாததால் பல உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ ‘யாரோ இறந்தால் நமக்கென்ன?’ என்ற நினைப்பில்தான் இருந்து வருகின்றனர். இப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னர் எச்சரிக்கை பலகை அமைத்து, தடுப்புச்சுவர் எழுப்பியிருக்கின்றனர். வெள்ளம் வடிந்த பின்னர் அணை கட்டி என்ன பயன்? உயிர்கள் போவதற்கு முன்பு இதையெல்லாம் செய்திருக்கலாமே!” என்றார் கோபத்துடன்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ, “இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாலம் கட்டும் ஒப்பந்ததாரர் எடுத்திருக்கவேண்டும். எடுக்காதது தவறுதான். இனி இதுபோல் நடக்காவண்ணம் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் கட்டுமானப்பணிகள் நடைபெறும்.” என்றனர்.