மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் வழக்கை விசாரித்து வரும் முறப்பநாடு காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருந்த சிறப்பு அதிகாரி சுரேஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், கடந்த 26-ம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தே வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தாமிரபரணி ஆற்றங்கரையில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க லூர்துபிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரை முறப்பநாடு போலீசார் முறையாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த அலட்சியமும் லூர்து பிரான்சிஸ் கொலைக்கு முக்கியக்காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. "போலீசாரின் அஜாக்கிரதையான செயலை அந்த கொலைக்கு காரணம். எனவே விஏஓக்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் எங்கள் மேல் அதிகாரிகலிடமே புகார் கொடுப்போம்" என்று வி.ஏ.ஓ சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலையை விசாரித்து உண்மையைக் கண்டறிய சிறப்பு அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுரேஷ் நியமிக்கப்பட்டார். அவர் தனது முதல் கட்ட விசாரணையை நேற்று முன்தினம் முறப்பநாடு காவல் நிலையத்தில் தொடங்கினார். முறப்பநாடு காவல் நிலையத்தை பொருத்தவரை குற்றச் செயல்கள் அதிகம் நடக்கும் ஒரு காவல் நிலையம் ஆகும். ஆனால், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருந்தது. இது சிறப்பு அதிகாரி சுரேஷ்க்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரித்து வருகிறார். முறப்பநாடு பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர் சிலரையும் அழைத்து அவர் விசாரித்தார்.
இது குறித்து சிறப்பு அதிகாரி சுரேஷ் நம்மிடம், "முதல் கட்ட விசாரணையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். இன்னும் பலரிடம் பேச வேண்டியது இருக்கிறது. பலரை வரவழைத்து விசாரிக்க வேண்டியது இருக்கிறது. அதற்குப் பிறகு உங்களிடம் பேசுகிறேன்" என்றார்.