திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரம் அடுத்த அருங்குளம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் முரளி. இவர் அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக ரகு என்ற ரகுவரன் பணியாற்றி வருகிறார். கடந்த மே 1ம் தேதி அருங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்துள்ளது. அப்போது பஞ்சாயத்து தலைவர் சரண்யாவின் பணிகளில் அவரது கணவரான அ.தி.மு.க பிரமுகர் முரளி தலையீடு செய்துள்ளார்.
இதைப் பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ரகு, ‘ஊராட்சி மன்றத்தலைவரின் பணிகளில் தலையீடு செய்வது சட்டப்படி குற்றம். இப்படி செய்யக்கூடாது’ என முரளியை தட்டிக் கேட்டதாகவும், அதை ஏற்க மறுத்து முரளி தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்போல் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அ.தி.மு.க பிரமுகர் முரளிக்கும், கிராம நிர்வாக அலுவலர் ரகு-வுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வி.ஏ.ஓ ரகுவை அ.தி.மு.க பிரமுகர் முரளி திட்டி உள்ளார். மேலும் அவரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்து வந்துள்ளார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், ‘அ.தி.மு.க பிரமுகர் முரளி பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்.
மேலும், என்னை மிரட்டுகிறார். தகாத வார்த்தையில் முரளி திட்டுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் வி.ஏ.ஓ-க்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அ.தி.மு.க பிரமுகர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.