கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக மாவட்ட சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு வருங்காலங்களில் தீயவழிகளில் மனத்தைச் செலுத்தாமல் நல்வழியில் மனத்தை செலுத்த பயிற்சி தரப்படுகிறது.
கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவர்கள் வளரும் சூழ்நிலையால்தான் குற்றங்கள் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, அவர்களைத் தனியாகத் தங்க வைத்து மனதை நல்வழியில் செலுத்தப் பயிற்சி தருவதே சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நோக்கம். ஆனால், தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சீர்திருத்தப் பள்ளியாகச் செயல்பட வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.
மேலும் சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு மோசமான சூழல் இருப்பதால்தான் சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிறார் கூர்நோக்கு இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமான, சத்தான உணவு, போதிய இடவசதி, தேவையான உடைகள், சுத்தமான கழிவறைகள், குளியல் வசதி, யோகா, உடற்பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்கள் தான் நாட்டின் செல்வங்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டங்களையும் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என, வானதி சீனிவாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மேனகா அஜய்