தி.மு.க-வுடன் ம.தி.மு.க-வை இணைக்கலாம் என வைகோவுக்கு கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் ‘தங்கள் சமீபகால நடவடிக்கையால் ம.தி.மு.க-வுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது’ என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும் சந்தர்ப்பவாத மற்றும் சுயநல அரசியலுக்கு நீங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்று அறிந்து கட்சி உறுப்பினர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மகனை ஆதரித்து அரவணைப்பதும், உங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை நீங்கள் இன்னமும் உணராமல் இருப்பது, வருத்தம் அளிப்பதாக அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும் கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் இனியும் ஏமாற்றம் அடையாமல் இருக்க ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைந்துவிடுவது சமகால அரசியலுக்கு சிறந்தது’ என்றும் கடிதத்தில் துரைசாமி கூறி இருந்தார்.
இந்த கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ‘இதுபோன்ற பரபரப்புக்காகவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை’ என ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைக்கும் எண்ணமில்லை. ம.தி.மு.க முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க அமைப்புத் தேர்தல் 70 சதவீதம் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் துரைசாமி எழுதிய கடிதத்தை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு வராமல் இருந்த துரைசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார் என்றால், எந்த நோக்கத்துடன் இருக்கும்.
கட்சியை தி.மு.க-வுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம், நிராகரிக்கின்றோம். எல்லா இடங்களிலும், தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனி, திருப்பூர் துரைசாமி பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்’ என வைகோ கூறியுள்ளார்.