வைகோ
வைகோ

விஷ சாராய உயிரிழப்பு: ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ - வைகோ

தமிழ்நாடு அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை கடைகளை படிப்படியாக குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கு மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதேப்போல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வேண்டும் என கோரி வரும் நிலையில் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பதும், உயிர் பலிகள் ஆவதும் வேதனை அளிக்கிறது.

அரசு விற்பனை செய்யும் மதுவைப் போன்றே கள்ளச்சாராயப் புட்டிகள் புழக்கத்தில் இருப்பதும், அதனைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையினரின் அலட்சியத்தாலும் இது போன்ற உயிர் இழப்புகள் நேர்கின்றன. கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இதை தடுக்க தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு இருப்பது ஆறுதல் தருகிறது.

இனியும் இதுபோன்ற துயர சம்பவங்களுக்கு இடம் இல்லாத நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் ம.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை’ என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com