குமரி கடல் பகுதிக்கு கப்பலில் வந்த மத்திய அமைச்சர்கள் கடலில் பலத்த காற்று வீசி வருவதால் விசை படகில் இறங்க முடியாமல் கப்பலில் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சாகர் பராக்கிராம் யாத்ரா திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மீனவ கிராமங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரையில் 7 கட்டங்களை முடித்த நிலையில், 8-வது கட்ட பயணம் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று துவங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக அமைச்சர்கள் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் வந்து தேங்கப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் ஒரு நாட்டிகல் தொலைவில் காத்திருக்கும் நிலையில் குமரி மாவட்ட மீனவர்கள் அமைச்சர்களை அழைத்து வர மீன்பிடி விசைபடகை எடுத்து கப்பலின் அருகே சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில், கடலில் பலத்த காற்று வீசிய காரணத்தால் கப்பலில் இருந்து படகினுள் அமைச்சர்களால் இறங்க முடியவில்லை. படகும் கப்பலும் ஒன்றோடோன்று உரசி விபத்து ஏற்படும் சூழலும் உருவானது.
இதன் காரணமாக உயரமான கப்பலில் இருந்து படகில் இறங்க முடியாமல் ஒன்றரை மணி நேரமாக நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர்களை அதன் பின்னர் அதிகாரிகள் பத்திரமாக மீட்டு ஆய்வு நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.