‘தி.மு.க-வின் ஊழல் ஆட்சியை நாடே அறியும்’ - ராஜ்நாத் சிங் விமர்சனம்

‘தி.மு.க-வின் ஊழல் ஆட்சியை நாடே அறியும்’ என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
ராஜ்நாத் சிங், மு.க.ஸ்டாலின்
ராஜ்நாத் சிங், மு.க.ஸ்டாலின்

சென்னை தாம்பரத்தில் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசுகையில், ‘நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழிதான் தாய்.

தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டுக்கு, இன்று நான் வந்துள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருக்குறளில் உள்ள சிறந்த வரிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. சித்தர்கள், ஆழ்வார்கள் இந்த பூமியில் உள்ளனர் என்பது பெருமையாக உள்ளது. பழமை வாய்ந்த செங்கோல் என்ற சொல் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செங்கோல் நிறுவிய பிறகு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் செங்கோலின் பெருமை தெரியவந்துள்ளது.

இதன் பிறகு புதிய வரலாறு தமிழகத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டில் பல முன்னேற்றம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் வளர்ச்சி விகிதம் மிக குறைவாக இருந்தது.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு பெரிய அளவில் மதிப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் குரலுக்கு யாரும் செவிசாய்க்காமல் இருந்தனர்.

ஆனால், இன்று இந்தியா என்ன சொல்ல போகிறது? என உலக நாடுகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிக்கொண்டு இருக்கிறார்.

மக்களின் வளர்ச்சிக்காக பா.ஜ.க கட்சி நடத்துகிறது. பிற கட்சிகளோ ஆட்சியை பிடிப்பதற்காக கட்சியை நடத்துகின்றன. தி.மு.க-வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியில் ஊழல் நடக்கிறது. பா.ஜ.க-வை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையிலிருப்பார்கள். ஸ்டாலின் என்பது ரஷ்ய சர்வாதிகாரியின் பெயர். அப்படிப்பட்டவர் உங்களை ஆட்சி செய்யலாமா?

ஒருமுறை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வாய்ப்பு தாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை எப்படி இருக்கும்? என்று நிரூபித்து காட்டுகிறோம். அப்படி ஒருவர் ஊழல் செய்தால் அவர் பெயர் அரசு பட்டியலில் இருக்காது. அவருடைய பெயர் ஜெயிலில்தான் இருக்கும்’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com