‘இளைஞர்கள் வரும் தலைமுறையை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும்’ - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘இளைஞர்கள் வரும் தலைமுறையை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும்’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

'ரோஜ்கார் மேளா' எனும் வேலைவாய்ப்பு மேளா மூலம் 70,000க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று காலை வழங்கினார். இதன் பிறகு, புதிதாக பணியில் சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6வது வேலை வாய்ப்பு திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மேடையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

தற்போது 1 வருடத்தில் மட்டும் 4.20 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கி உள்ளார். மீதம் வேலை வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். பா.ஜ.க மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று திருச்சியில் பணி நியமன ஆணையை பெறும் நம்முடைய இளைஞர்கள், வரும் தலைமுறைகளை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

மேலும், இன்று மட்டும் இந்தியா முழுவதும் 45 இடத்தில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு கடந்த 9 ஆண்டுகளில் மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. நெடுஞ்சாலை துறை, விமான நிலைய கட்டமைப்பு, இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வரும்போது மெட்ரோ ரயில் திட்டமானது 5 நகரங்களில் இருந்தது.

தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுகிறது. ஏழைகளின் அரசாக பா.ஜ.க செயல்படுகிறது. குறிப்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம்.

வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது சர்வதேசத்துக்கு இணையான கல்வி கொள்கையாக உள்ளது.

1 லட்சம் புதிய startup நிறுவனங்கள் துவங்கப்பட்டு இந்தியா 5வது பொருளாதார நாடாக உயர்ந்த உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போருக்கு இடையே 23 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் அழைத்து வரப்பட்டது என நிறையவே செய்து வருகின்றது பா.ஜ.க அரசு.

ராணுவ தளவாடம் இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தொழிற்சாலை ஆரம்பித்து நாம் ஏற்றுமதி செய்கிறோம். கடந்த ஆட்சியில் 1 ரூபாய் திட்டத்தில் பயனாளர்களுக்கு 15 பைசா செல்கிறது என கூறப்பட்டது.

இதனை மாற்றும் விதமாக குட்கவர்ஸ் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு நேரடியாக பயனாளர்களுக்கு திட்டம் சென்றடைகிறது. குறிப்பாக அடுத்த 25 ஆண்டுகள் நாம் அனைவரும் இணைந்து நாடு முன்னேற செயல்படுவோம்’ என்றார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியில் சேர உள்ள இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெறுவதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

- ஷானு.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com