பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் இன்று முதல் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.
ராமநாத சுவாமியின் அருளால் நம்முடைய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்ல இருக்கிறார்.
‘என் மண் என் மக்கள்’ என்கின்ற இந்த பாதயாத்திரை வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டுமல்ல. பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான நடைபயணம்.
தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மற்றும் கொல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் நடைபயணம் ஆகும்.
இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதில் மரியாதையை ஏற்படுத்துகின்ற நடைபயணம். மேலும் தமிழ்நாட்டில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடைபயணம். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த மேற்கொள்ளப்படுகிறது இந்த நடைபயணம்.
ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலனை பேணுகின்ற ஓர் அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை. இன்று தொடங்கி 234 தொகுதிகளிலும் 700 கி.மீ தூரத்துக்கு அண்ணாமலை நடக்க இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும், நம்முடைய பிரதமரின் செய்திகளை கொண்டு செல்ல இருக்கிறார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறார்.
பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழைமை மற்றும் சிறப்பை உலகின் பல்வேறு மேடைகளிலும் முழங்கி இருக்கிறார். ஐ.நா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது பிரதமர் மோடிதான்.
தற்போது ஜி 20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டு இருக்கின்றன. இதன் முத்திரை வாசகமான ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.
நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தி.மு.க உள்ளது. தி.மு.க அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கைதாகி உள்ளார். காங்கிரஸ், தி.மு.க என்றால் நிலக்கரி, 2 ஜி ஊழல்தான் நினைவுக்கு வரும்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்விட் போட்டால் உங்களது ஆட்சிக்கே பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் செய்த பலகோடி ரூபாய் ஊழல் தமிழ்நாட்டு மக்கள் முன் வெளியே வந்திருக்கிறது.
இந்த ஆட்சியானது ஊழல் புரிபவர்களின் ஆட்சி. குற்றம் புரிபவர்களின் ஆட்சி. இந்த அரசு மின் பகிர்மான கழகத்தில் ஊழல் புரிந்த அரசு. ஏழை மக்களுக்கு விரோதமான அரசு.
கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பது ஏன்? இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் எல்லா ரகசியங்களும் வெளியில் வந்துவிடும்’ என்றார்.