அரைவேக்காட்டுத் தனமாக பேசியுள்ளார் உதயநிதி- உதயகுமார் காரசாரமான பேச்சு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரைவேக்காட்டுத் தனமாக பேசியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், உதயகுமார்
உதயநிதி ஸ்டாலின், உதயகுமார்

சனாதனம குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் உதயக்குமார்பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர், "ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கக் கூடிய வகையில், தன்னுடைய தாத்தா, தந்தை அரசியல் செல்வாக்கால் பதவி ஏற்று இருக்கிற உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு நாட்டிலே வேற்றுமையை பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்திலே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவருக்கு ஒரு கருத்திலே, ஒரு மரபிலே ஒரு பழக்க வழக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அதை நான் ஒழித்து கட்டுவேன் என்று ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் பேசுவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இருக்காது.

உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிற கருத்து சொந்த கருத்தாக அல்லது கட்சியின் கருத்தாக, இயக்கத்தினுடைய கருத்தாக சொல்லி இருப்பதாக இன்றைக்கு நாடு முழுவதும் விவாவித்து கொண்டிருக்கின்றார்கள். மக்களிடம் வெறுப்புணர்வையும், விஷவிதையை ஏற்படுத்தி உள்ளார்களோ? என்று மக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள். யாரும் வேணாலும் கருத்து சொல்லலாம். ஆனால் அது மக்களுக்கு அறிவுச்சுடராக இருக்க வேண்டுமே தவிர பகைமை உணர்வை தூண்டுவது போல அமையக்கூடாது.

நீங்கள் சனாதனத்தை பற்றி பேசி இருக்கிறீர்களே அதை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தது உண்டா? நீங்கள் எழுதிக் கொடுத்ததை வைத்து பேசினீர்களா ? அல்லது சொந்தமாக பேசினீர்களா என்பது வேறு விவாதம், நீங்கள் சொல்லிய அந்த சொல் உங்களுடைய தகுதியை இன்றைக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஆகவே சமூக நீதிக்கும், சமதர்மத்திற்கும் எதிரானது என்று சொல்லுகிற அந்த நம்பிக்கையை காலம், காலமாக கடைபிடித்து வருகிற அந்த நம்பிக்கையை, அதை கடைபிடித்து வருகிற அந்த மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கை ஒழிக்க போகிறீர்களா? அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்க போகிறீர்களா என்பதுதான் இந்திய மக்களின் கேள்வியாக உள்ளது.

இதுபோன்று விஷ விதைகளை விதைத்து உங்களை தலைவராக வளர்த்துக் கொள்வதிலே, நீங்கள் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த அரைவேக்காட்டுத் தனமாக தான் உங்களுடைய பேச்சு உள்ளது என்று நாடு முழுவதும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்" என கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com