மயிலாடுதுறை மாவட்டம், தத்தங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிகுருநாதன் (55). அதேப் பகுதியில் பட்டறை நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை செய்து வந்தார். இருவருமே மது குடிக்கும் பழக்கம் உடைவர்கள்.
நேற்று இருவரும் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அருகிலேயே 2 டாஸ்மாக் மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. அதில் ஒரு பாட்டிலில் பாதி மதுவும், மற்றொரு பாட்டில் பிரிக்காமலும் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தகவலறிந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மதுபாட்டில்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் இருவரும் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பழனிகுருநாதன், பூராசாமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மதுபானத்தில் சயனைடு கலந்து இருந்ததாக தஞ்சாவூர் தடயவியல் மருத்துவ நிபுனர் குழு ஆய்வில் தெரியவந்து இருப்பதாகவும், டாஸ்மாக் மதுபானத்தால் உயிரிழக்கவில்லை என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியிருந்தார்.
இதை அறிந்த உறவினர்கள் இந்த பிரச்னையை மாவட்ட ஆட்சியர் பொய்யான காரணம் கூறி திசை திருப்புவதாக குற்றம்சாட்டி மங்கையநல்லூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சொத்து பிரச்னையில் மதுபானத்தில் சயனைடு கலந்துகொடுத்து 2 பேரையும் கொலை செய்ததாக பழனி குருநாதனின் சகோதரர்களான (பழனி குருநாதனின் தந்தையின் முதல் தாரத்து மகன்கள்) மனோகர், பாஸ்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என கூறியுள்ளார்.