பணம் கேட்டு தர மறுப்பு: கத்தியால் தாக்கிய இருவர்: அதிரடியாக கைது செய்த போலீசார்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பணம் தர மறுத்த பழைய இரும்பு கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய இரண்டு பேர் கைது
கைதான இரண்டு பேர்
கைதான இரண்டு பேர்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பட்டுமணி (42). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குன்றத்தூர் செல்லும் சாலையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு கடந்த 21ம் தேதி இரவு பைக்கில் வந்த இரண்டு பேர் பட்டுமணியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதற்கு பட்டுமணி பணம் தர மறுத்து இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஆத்திரமடைந்த அந்த இருவர், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பட்டுமணியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

பின்னர் பட்டுமணியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து பட்டுமணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியால் தாக்கி விட்டு சென்ற இருவரையும் வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் பகுதியில் இருவரும் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்த போலீசார் அங்கு இருவரையும் கைது செய்ய சென்றனர். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓடிய இருவரும் தவறி விழுந்ததில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து கிளாய் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரு (22), சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற பூனை விக்கி (24) ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்த போலீசார், அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com