மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தஞ்சை டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரு சம்பவமும் ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபாப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லம்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி(65) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மாலை 5 மணிவரையில் வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததையும், அருகில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் இரண்டு இருந்ததில் ஒன்றில் பாதி மதுவும், ஒரு பாட்டில் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்துள்ளது. உடன் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொல்லம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உறவினர்களிடம் பேசியபோது, “அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் இரண்டுபேரும் இறந்துள்ளனர். இறப்பதற்கு பத்து நிமிடம் முன் வரை நன்கு பேசிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால்தான் இருவரும் உயிரிழந்துள்ளனர்” என்றனர் சோகத்துடன்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி சஞ்ஜீவ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடலும் தடய அறிவியல் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
”இங்கேயே உடலை வைத்திருந்தால் சாலைமறியல், போராட்டம் என டென்ஷன் ஏற்படும். அதனால்தான் திருவாரூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் இறந்தவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்வதற்கு பெரிய அளவில் உறவினர்கள் பலம் இல்லை. எனவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது பணம் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்றபடி போலீசார் வழக்கை முடித்து விடுவார்கள்”என்றனர் விஷயமறிந்த சிலர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசினோம். “டாஸ்மாக் மது விஷமாகியிருந்தால் பல பேர் இறந்திருப்பார்கள். அப்படி எதுவும் இல்லை. இரு மது பாட்டில்களில் சயனைடு விஷம் கலந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பாட்டிலின் மூடியை திறந்து சயனைடை கலந்துவிட்டு மூடியை ’பெவிகுயிக்’போட்டு ஒட்டி இருக்கின்றனர். பிரேத பரிசோதனை மற்றும் தடய அறிவியல் சோதனையில் சயனைடுதான் என முடிவாகிவிட்டால் என்ன மோட்டிவ்? யார் செய்திருப்பார்கள்? என்பதை கண்டு பிடித்துவிடலாம். எனவே சோதனையின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்