மனைவியை திருட்டுத்தனமாக போட்டோ எடுத்ததோடு, அவரது கணவரை பணமும் கேட்டு மிரட்டிய இரண்டு நல்லவர்களை ‘மாமியார்’ இல்லத்துக்கு அனுப்பி மரியாதை செய்திருக்கிறது கோவை சிட்டி போலீஸ்.
பஞ்சாயத்து இதுதான்…
கோவை மாநகர போலீஸின் ஒரு அங்கமான கடைவீதி காவல் நிலையத்துக்கு சமீபத்தில் ஒரு பகீர் புகார் பதிவானது.அதை விசாரித்ததன் அடிப்படையில் சிலம்பரசன், மதன் எனும் இரு மன்மதன்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது போலீஸ்.
என்ன புகார், என்ன விவகாரம்? என்று கடைவீதி காவல்நிலைய போலீஸாரிடம் விசாரித்தபோது …”கோவை சிட்டியை சேர்ந்த 31 வயது பெண் ஒப்பணக்கார வீதியிலுள்ள ஜவுளிக்கடையில துப்புரவு பணியாளரா வேலை பார்த்துட்டு இருந்திருக்கிறார். இந்த கடையில திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் விற்பனை பிரிவிலும், தூத்துக்குடியை சேர்ந்த மதன் அந்த பிரிவின் மேனேஜராகவும் இருந்திருக்காங்க.
சிலம்பரசனுக்கும் அந்த பொண்ணுக்கும் பழக்கமாகியிருக்குது. ரெண்டு பேரும் பர்ஷனலா பேசிட்டு இருக்குறப்ப அந்த பொண்ணுக்கே தெரியாமல் சில போட்டோக்களை எடுத்திருக்கார் சிலம்பரசன். இப்ப கொஞ்ச நாளா ரெண்டு பேருக்கும் இடையில் ஏதோ பிரச்னை. அதனால் சிலம்பரசனிடம் பேசாமலே தவிர்த்திருக்குது அந்த பொண்ணு. இதனலா ஆத்திரமடைந்த சிலம்பரசன் ‘நீ பேசலேண்ணா, உன்னோட போட்டோஸை இன்ஸ்டாக்ராம்ல, ஃபேஸ்புக்ல போட்டுவிடுவேன்’னு சொல்லி அதை காண்பிச்சு மிரட்டியிருக்கார். ‘இதை எப்ப எடுத்த?’ன்னு அந்த பொண்ணு கேட்டப்ப,சிரிச்சுட்டு போயிருக்கார்.
அந்தப் பொண்ணு அதை தன் வீட்டுக்காரர்ட்ட சொல்லியிருக்குது. அவரோ சிலம்பரசனை பேரூர் சாலைக்கு கூப்பிட்டிருக்கார். கூடவே மதனும் வந்திருக்கார். சிலம்பரசனிடம் ‘கல்யாணம் ஆன பொண்ணு கூட நீங்க பழகுறது தப்பு, அவளை போட்டோ எடுத்தது அதைவிட தப்பு. இப்ப அதை வெச்சு மிரட்டுறது கிரிமினல்தனம்’ன்னு கண்டிச்சிருக்கார்.
உடனே சிலம்பரசனும், மதனும் சேர்ந்துகிட்டு ‘சரி பதினஞ்சாயிரம் பணம் கொடு. இந்த போட்டோக்களை வெளியிட மாட்டோம். இல்லேண்ணா நிச்சயமா நெட்ல ஏத்திடுவோம்’னு மிரட்டியிருக்காங்க. எவ்வளவோ கெஞ்சியும் கேட்கலை. அதனால அந்த பொண்ணும், கணவரும் நம்ம ஸ்டேஷன்ல புகார் கொடுக்க, நாம தெளிவா விசாரிச்சுட்டு ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்கள்.
ஓவர் ஆட்டம் போட்டா இப்டிதான்!
-ஷக்தி