தகாத உறவால் ஆசிரியை கொலை செய்யப்பட்டது தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடை சேர்ந்தவர் 55 வயதான மெடில்டா. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை. மணப்பாடை சேர்ந்த கார் ஓட்டுநர் ஸ்டீபனை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த ரஸ்கின் டிரோஸ் என்பவருடன் ஆசிரியைக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். குலசேகரன் பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார் மெடில்டா. ரஸ்கின் டிரோஸ் வெளிநாடு செல்வதற்காகப் பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை அவரால் திரும்பச் செலுத்த முடியவில்லை. மும்பை சென்றவர் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து அங்கிருந்து திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் மெடில்டாவின் நெருங்கிய உறவினரான ஜெய தீபக் என்பவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் ஆசிரியை வீட்டிலிருந்து ’காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் மெடில்டா வீட்டின் கதவைத் தட்டி ’என்ன ஆச்சு என்ன ஆச்சி?’என்று கேட்டுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. வீட்டிலிருந்து சத்தமும் இல்லை. அதனால், பயந்து போன அக்கம் பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார், ஆசிரியை வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பயங்கரமாகத் தாக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் மெடில்டா பிணமாகக் கிடந்தார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு அறையில் பதுங்கி இருந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் ஜெய தீபக் என்பது தெரிய வந்தது. ஆசிரியை மெடில்டாவை கொலை செய்துவிட்டு வீட்டில் பதுங்கி இருப்பதாக உண்மையை ஒத்துக் கொண்டார். உடனே அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்னதான் நடந்தது என அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தோம். "ஜெய தீபக்கிற்கும் ஆசிரியை மெடில்டாவிற்கும் கள்ள உறவு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி ஆசிரியை வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இது ஜெய தீபக்கிற்குப் பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் அவர் கொலை செய்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ரகசியமாக வந்து சென்றவர் போலீசாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரை பாதுகாக்கும் நோக்கத்தோடு போலீசார் விசாரணை நடக்கிறது" என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.