தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டெப்போவில் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து வருபவர் ராஜபாண்டி.
சீனியர் டிரைவரான ராஜபாண்டி, ஒரு மாதத்திற்கு முன்பு பஸ்சை கைகாட்டி நிறுத்தச் சொன்ன பயணிகளை ஏற்றாமல் சென்று விட்டார் என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அவர் செய்தது தவறு என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஓய்வுபெறும் வயதில் சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என கோபம் அடைந்த ராஜபாண்டி நேற்று இரவு டெப்போவுக்கு வந்து ‘என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் அல்லது எனது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து டெப்போ முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் டெப்போவுக்கு பஸ் செல்ல முடியவில்லை. டெப்போவில் இருந்து வெளியேயும் பஸ் செல்ல முடியவில்லை. அதிகாரிகளும் சக போக்குவரத்து கழக ஊழியர்களும் ராஜபாண்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுவைகுண்டம் போக்குவரத்து மேலாளர் மாடசாமி கூறுகையில், ‘டிரைவர் ராஜபாண்டி ஒரு மாதத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டது உண்மை.
இதனால் அவர் வீட்டுக்கு சரிவர செல்லவில்லை. அவரது உறவினர்கள் அவரிடம் எவ்வளவோ சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்தனர். சமாதானம் ஆகாத அவர் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே சுற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் டெப்போ முன் படுத்துக் கொண்டார். உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அத்தோடு பிரச்னையும் முடிந்துவிட்டது’ என்றார்.
- எஸ்.அண்ணாதுரை