‘செந்தில் பாலாஜியால் தி.மு.க-வுக்கே நெஞ்சு வலி வந்துவிட்டது’ - டி.டி.வி தினகரன்

‘செந்தில் பாலாஜியால் ஒட்டுமொத்த தி.மு.கவுக்கும் நெஞ்சு வலி வந்துவிட்டது’ என டி.டி.வி தினகரன் பேசியுள்ளார்.
ஸ்டாலின், செந்தில் பாலாஜி, டி.டி.வி தினகரன்
ஸ்டாலின், செந்தில் பாலாஜி, டி.டி.வி தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு பேசுகையில், ‘தி.மு.க அமைச்சரவை பட்டியல் வெளியானபோதே எனது கட்சியின் முக்கிய நிர்வாகி தொடர்புகொண்டு செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகிவிட்டார் என கூறினார்.

அப்போது நான், ‘வேலையை முடித்துக் கொண்டு வெளியேறிவிடுவார்’ என கூறினேன். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை துருதுருவென இருப்பார். ஆனால் அவர் தி.மு.க-வில் தங்கமாட்டார் என, நான் கணித்து கூறிவிட்டேன்.

அதுவே நடக்கப்போகிறது. எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்தால் இதுதான் நிலைமை. செந்தில் பாலாஜிக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை என்பது எனக்கு தெரியும்.

ஆனால் அவர் கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் அவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ED வரும் என்று செந்தில் பாலாஜி கனவிலும்கூட நினைத்து பார்த்து இருக்கமாட்டார்.

நான் 30 வயதில் இருந்தே இதையெல்லாம் பார்த்து வருகின்றேன். மடியில் கனமில்லை என்றால் பயம் தேவையில்லை. என்னை அமலாக்கத்துறை அழைத்தபோது பெட்டி படுக்கையுடன் துணிந்துதான் சென்றேன்.

அதற்கு தைரியம் வேண்டும். அமலாக்கத்துறை சக்தி வாய்ந்த ஒரு துறை. அதை எதிர்த்து போராட வேண்டும் என்றால் தைரியம் வேண்டும். சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அந்த தைரியம் இல்லை.. பாவம்.

நீங்கள் நினைப்பதுபோல செந்தில் பாலாஜிக்கு மட்டும் நெஞ்சு வலி வரவில்லை. தி.மு.க-வுக்கே நெஞ்சு வலி வந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தி.மு.க-வுக்கும் நெஞ்சு வலி வந்துள்ளது.

அ.தி.மு.க-வில் இருப்பவர்களிடம் பணம் இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு, பணம் வைத்துக்கொண்டு என்ன தான் செய்தாலும் ஜெயிக்க முடியாது.

அவர்கள் இன்னும் நிறைய பிரச்னையை சந்தித்தாக வேண்டி இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.

வரும் 2026ல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆட்சியையும் நாம் கொண்டு வர முடியும்’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com