சமயபுரம்: அம்மன் கோயிலில் 46 கிராம் தங்கம் திருட்டு - உண்டியல் எண்ணிய 2 பேர் கைது

திருச்சி சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது 46 கிராம் நகை திருடிய இருவர் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திருச்சி சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

‘வேறு யாராவது ஆட்டைய போட்டா ஆத்தா கிட்ட முறையிடலாம்; ஆத்தா கிட்டயே ஆட்டையப் போட்டா யாருகிட்ட முறையிடுறது?’ என்கிற கதையாக போய்விட்டது, திருச்சி சமயபுரம் கோயில் உண்டியல் என்னும் இடத்தில் ஒவ்வொரு முறையும் நடக்கும் திருட்டு.

திருச்சி சமயபுரம் கோயில் என்பது தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும், வெளிநாடுகளிலும் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த அம்மன் கோயில் ஆகும்.

இந்த கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை மாதத்திற்கு இரண்டு முறை எண்ணப்படும். இது அவ்வப்போது தேவைப்படும் பணி என்பதால் இதற்காக ஐயப்ப சேவா சங்கம் மற்றும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தோர் காணிக்கையை எண்ணி தரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

நேற்று அப்படி காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றபோது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களாக வந்த எம்.எஸ்.சி.ஐ.டி படித்த இரண்டு பேர் அஜய் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடிக்கடி கழிவறைக்கு போய்விட்டு வந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்து காணிக்கை எண்ணும் பணியின் இறுதியில் அவர்களை சோதனை செய்தபோது அவ்வப்போது தங்கத்தை எடுத்துக் கொண்டு போய் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திருச்சி சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இதன் அடிப்படையில் அவர்கள் மீது கோவில் அலுவலர்கள் புகார் கொடுத்து, சமயபுரம் காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 46 கிராம் தங்கத்தை கைப்பற்றிய போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பக்தர்களாக, தன்னார்வலராக வந்து பணிபுரிந்துவிட்டு கல்லூரி படித்து முடித்த இருவர் இப்படி தங்கத்தை திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் நடந்த காணிக்கை எண்ணும் பணியின்போது வேறொரு கோயிலின் இ.ஓ இதேப்போல் தங்கத்தை திருடி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'ஒவ்வொரு முறை காணிக்கை எண்ணும்போதும் இப்படி யாராவது திருடுவது கலியுகத்தில் சாமியின் மீது கடவுள் மீது பக்தி குறைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது' என உண்மையான பக்தர்கள் புலம்பத் தொடங்கியுள்ளார்கள்.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com