திருச்சி: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்-தட்டிக்கேட்ட போலீசுக்கு மண்டை உடைப்பு

காயம் அடைந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்-தட்டிக்கேட்ட போலீசுக்கு மண்டை உடைப்பு

திருச்சி அருகே அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சார்லஸ்(23). இவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதையொட்டி அன்று இரவு சார்லஸ், அவரது நண்பர்கள் பாரதிநகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்கான் (22), சுப்பையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(23), பாண்டி ஆகிய 4 பேரும் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை டாஸ்மாக் கடை அருகில் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பாலக்கரை போலீஸ்காரர் ராஜபாண்டி, ஊர்க்காவல் படை வீரர் தினேஷ் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களைக் கண்டித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ்காரர் ராஜபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளிவிட்டனர். இதில் அவருக்குப் பின்னந்தலையில் அடிபட்டது. காயம் அடைந்த அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாலக்கரை காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லஸ், முகமது ரியாஸ்கான், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பாண்டியை தேடி வருகிறார்கள்.

எத்தனையோ பெரிய ரவுடிகள் இப்படி அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்குக் கைது செய்து வழக்குகள் போடப்பட்ட பின்னரும், இப்படிக் குட்டி குட்டி ரவுடிகள் பண்ணும் அட்டூழியத்தை எப்படித் தான் தடுப்பது என்று போலீசார் மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com